கருணாவின் விடயத்தில் அரசாங்கம் ஏன் தொடர்ந்தும் அமைதிகாத்து வருகின்றது  – துஷார இந்துனில் கேள்வி

0
28


(செ.தேன்மொழி)

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்திருக்கும் கருத்து சிங்கள பௌத்த மக்களையும் , இராணுவத்தினரையும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட வேட்பாளர் துஷார இந்துனில், அரசாங்கம் ஏன் கருணாவின் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அமைதிகாத்து வருகின்றது,  இனவாதத்தின் ஊடாக அரசியல் செய்துவரும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் கருணாவிற்கு முதலிடம் வழங்கி அவரது கருத்தை மறைக்க முற்படாமல் உடனடியான தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் ஒரு கையில் இரு செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கருணா அம்மான் போன்ற நபர்களை நிறுத்தி இனவாதத்தை பேசி தமிழ் மக்கள் மத்தியில் அவர்களின் மனதை வென்றுக் கொள்வதுடன் , தெற்கில் சரத் வீரசேகர போன்ற நபர்களை முன்னிறுத்தி அங்கும் இனவாத கருத்துகளை கூறி சிங்கள மக்களின் மனதை வெற்றிக்கொள்ளும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கருணா அம்மாள் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் , தான் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தராக செயற்பட்ட போது ஆனையிரவில் 2000 -3000 வரையிலான இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

இன்று மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த கருத்து ஒட்டு மொத்த சிங்கள பௌத்த மக்களை மாத்திரமின்றி , இராணுவத்தினருக்கும் பெரும் அவமானதம்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் ஆளும் தரப்பு உறுப்பினரான விமல் வீரவன்ச கருணாவின் கருத்தை ஆதரிக்கும் வகையிலான கருத்தொன்றை தெரிவித்திருக்கிறார். அதாவது பௌத்தமத வரலாற்று கதைகளிலே ஒன்றான ‘அங்குலிமால ‘ என்ற கதையில் கொடூர குணப்படைத்தவனாக சித்தரிக்கப்பட்டுள்ளவனே திருந்தி பிக்குவாக மாறுகையில், கருணாவாலும் அவ்வாறு மாற முடியாதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கருணா மாறுவதற்கு அவர் பௌத்த சமயத்தை தழுவியுள்ளரா?  அல்லது பௌத்த தேரர்களைப் போன்று காவியுடை அணிந்துள்ளாரா? இதேவேளை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் யுத்தகாலத்தில் கொலைகள் இடம்பெறுவது யதார்த்தமே என்று கூறியுள்ளார். இந்த கருத்துக்கள் கருணாவை பாதுகாப்பதுடன் , அவரது கூற்றை மறைக்கும் வகையிலும் அமையப் பெற்றுள்ளன.

யுத்தகாலங்களில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டமை உண்மையே. ஆனால் அதனை ஒரு வீரதீர செயலாக அறிவிக்க வேண்டிய தேவையில்லையே. தேர்தல் பிரசாரங்களில் இவ்வாறான கருத்துகளை தெரிவிப்பதானது இனவாதத்தை தூண்டி வாக்குகளை அதிகரித்துக் கொள்ளும் திட்டமாகவே எமக்கு தோன்று கின்றது. இதுவே எமது கட்சியில் யாராவது இவ்வாறு கூறியிருந்தால் ஆளும் தரப்பினர் அமைதியாக இருந்திருப்பார்களா? இந்நிலையில் கருணாவின் கருத்து தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் , அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக  குற்றப்புலனாய்வு பிரிவு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.  

இரு முறை அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் சமூகமளித்திருக்கவில்லை. இதேவேளை தான் சுகயீனம் அடைந்திருப்பதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாட்டின் சாதாரண மக்கள் யாராவது இவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தால் அவரை அள்ளிக் கொண்டுவந்து கைது செய்யும் பொலிஸார் , கருணாவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ் புலனாய்வு பிரிவினரை அம்பாறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனூடாகவே நாட்டின் சட்டம் எவ்வாறு பேணப்படுகின்றது என்பது தெளிவாகியிருக்கின்றது. 

அரசாங்கம் ஏன் கருணாவின் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அமைதிகாத்து வருகின்றது என்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள பௌத்த மக்களையும் இராணுவத்தினரையும் தலைக்குனியச் செய்துள்ள கருணாவின் கருத்து தொடர்பில் , தாங்களே சிங்கள பௌத்த மக்களதும் , இராணுவத்தினரதும் நலனுக்காக பாடுப்படும் தரப்பினர் என்று கூறிக் கொள்ளும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here